திட்டக்குடி அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


திட்டக்குடி அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:48 PM GMT (Updated: 2 Jan 2019 11:48 PM GMT)

திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி, 


திட்டக்குடி அடுத்துள்ள அருகேரி ஊராட்சிக்குட்பட்டது கீழ்நெமிலி. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றமுடியவில்லை. இதன்காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பாதிப்பு அடைந்து வந்தனர். மேலும் இக்கிராமத்தில் தெரு மின்விளக்கு, மயான பாதை போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இதனை சரிசெய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இப்பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு காலிகுடங்களுடன் அப் பகுதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த நல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்கரவர்த்தி கிராம முக்கியஸ்தருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story