கேரளாவில் முழு அடைப்பு: தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்


கேரளாவில் முழு அடைப்பு: தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:30 AM IST (Updated: 3 Jan 2019 9:55 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததையொட்டி நேற்று தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன.

களியக்காவிளை,


சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், பா.ஜனதா, இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் 2 பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கேரளாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், கேரளாவில் நேற்று அரசு மற்றும் தனியார் வாகனங்கள் ஓடவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.


குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு தினமும் ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன. நேற்று முழு அடைப்பு காரணமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்ற தமிழக பஸ்கள் அனைத்தும் எல்லை பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

களியக்காவிளையில் இருந்து கேரள எல்லையான ஊரம்பு, செறுவாரக்கோணம் போன்ற இடங்களுக்கு தினமும் பல நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் இந்த பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

மேலும், கேரள பகுதியான பாறசாலை வழியாக கொல்லங்கோட்டிற்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் மாற்றுப்பாதையில் இயங்கின.


முழு அடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து களியக்காவிளை மற்றும் நாகர்கோவிலுக்கு வந்து செல்லும் கேரள அரசு பஸ்கள் எதுவும் வரவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பொருட்களை ஏற்றி சென்ற லாரிகள் களியக்காவிளை பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன. பஸ்கள் எதுவும் ஓடாததால் கேரளாவுக்கு செல்ல வேண்டி பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளானார்கள். சிலர் ரெயில்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

Next Story