திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்க பணிகளை கலெக்டர் ஆய்வு கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை


திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்க பணிகளை கலெக்டர் ஆய்வு கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2019 11:00 PM GMT (Updated: 3 Jan 2019 4:41 PM GMT)

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வுசெய்தார். அப்போது கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இருப்பதாக அதிகாரிகள், கலெக்டரிடம் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஆன்மிக நகரம் மட்டுமின்றி சுற்றுலா நகரமாகவும் உள்ளது. இங்கு மலையை சுற்றி கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் உள்பட பல்வேறு ஆஸ்ரமங்களை காண வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.65 கோடி மதிப்பில் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடத்து செல்வதற்காக நடைமேடை, சிமெண்டு இருக்கைகள், எல்.இ.டி. விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள பட்டுப்போன மரங்களில் மர சிற்பங்கள் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பட்டுப்போன மரங்களில் செய்யப்பட்டு வரும் சிற்பங்களையும், அதனை பராமரிக்க மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் மர சிற்பியிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், கிரிவலப் பாதையில் உள்ள 30 பட்டுப்போன மரங்களில் அணில், டால்பின், சித்தர், கிளி போன்ற சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் 6 மரங்களில் சிற்பங்கள் செய்யும் பணி முடிந்துவிட்டன. ஒரு மரத்தில் சிற்பம் செய்ய ரூ.20 ஆயிரம் செலவிடப்படுகிறது.

மேலும் செங்கம் சாலையில் இருந்து அபய மண்டபம் வரை ரூ.2 கோடியே 36 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மற்ற பகுதியில் ரூ.2 கோடியே 54 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. கிரிவலப்பாதையில் 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலான இடங்களில் கேமராக்கள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றனர்.

ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் பூபாலன், நாராயணன், தாசில்தார் மனோகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story