3 மாநில கவர்னர்கள் பங்கேற்ற ஜெயந்தி விழா: ஏழைகளுக்கு தானம், தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் சக்தி அம்மா பேச்சு
‘ஏழைகளுக்கு அன்போடு தானம், தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்’ என்று ஜெயந்தி விழாவில் சக்தி அம்மா தெரிவித்தார். இந்த விழாவில் கர்நாடகா, அசாம், உத்ரகாண்ட் மாநில கவர்னர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர்,
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 43-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாராயணி பீடத்தில் காலை 5 மணி முதல் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், நாராயணி மூலமந்திர ஹோமம், கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. அதைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் ஊர்வலம் நடந்தது.
இதில், பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நாராயணி பக்தசபா பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன் நாராயணி வித்யாலயா பள்ளியில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக ஸ்ரீபுரம் வந்தனர். பெண் பக்தர்கள் முளைப்பாரி, அகல் விளக்கு எடுத்து வந்தனர். 11 மணிக்கு நாராயணி பீடத்தில் சக்தி அம்மாவுக்கு வெளிநாட்டு பக்தர்கள் பாத பூஜை செய்தனர். அதைத்தொடர்ந்து சக்தி அம்மாவுக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது. திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் சக்தி அம்மா பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசியதாவது:-
ஒருகாலத்தில் திருமலைக்கோடி என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று தெய்வத்தின் அருளால் உலகம் முழுவதும் போற்றக்கூடிய புனிதமான இடமாக மாறியுள்ளது. யாராவது தவறு செய்தால் வேலூர் ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என்று முன்பு தெரிவிப்பார்கள். ஆனால் அந்தநிலை மாறி இன்று வேலூர் அனைவராலும் விரும்பும் ஒன்றாகி விட்டது. இதற்கு சக்திதான் காரணம். உலகில் உள்ள அனைவரிடமும் சக்தி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வேலூரை நாடி வருவதற்கு சக்தி மட்டும் காரணமல்ல. சக்தியோடு கூடிய அன்புதான் காரணம்.
சக்தியோடு அன்பு இருந்தால் அனைத்தையும் சாதிக்க முடியும். இதன் மூலம் புகழ் பெற்று உயர்ந்த நிலையை அடையலாம். உலகத்தில் ஏதாவது நன்மை நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது.
அன்பு இருந்தால் மங்கலம் உண்டாகும். காசு, பணம் சேர்த்து வைப்பதை மட்டும் வாழ்வின் முக்கிய நோக்கமாக வைத்திருக்க கூடாது. ஏழைகளுக்கு அன்போடு தானம், தர்மம் செய்ய வேண்டும். தானம், தர்மம் செய்யும்போது புண்ணியம் கிடைக்கும். இது பல ஜென்மங்களுக்கு பலனளிக்கும்.
இவ்வாறு சக்தி அம்மா பேசினார்.
விழாவில், அசாம் மாநில கவர்னர் ஜகதீஷ்மூகி பேசுகையில், ‘தமிழக மக்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாகும். தமிழக மக்கள் எளிமையாக வாழ கூடியவர்கள். சக்தி அம்மாவின் அருளாசி கிடைப்பதால் அனைவருக்கும் நன்மை கிடைக்கிறது’ என்றார்.
உத்ரகாண்ட் மாநில கவர்னர் பேபிராணி மயூரியா பேசுகையில், ‘வேலூர் தங்கக்கோவில் பாரதத்தின் சிறந்த ஆன்மிகத்தின் அடையாளமாக விளங்குகிறது. ஏழை, எளிய ஆதரவற்றவர்களுக்கு சக்தி அம்மா உதவி செய்து வருகிறார். அனைவரும் சக்தி அம்மாவை முன்மாதிரியாக எடுத்து கொண்டு, ஏழை மக்களின் மேம்பாட்டிற்கு போராட வேண்டும். உத்ரகாண்டை போன்று மலைக்கோடியும் ஒரு தெய்வீக பூமியாகும்’ என்றார்.
கர்நாடக கவர்னர் வாஜூபாய்வாலா பேசுகையில், ‘சக்தி அம்மாவை நாம் அனைவரும் பின்பற்றி ஆன்மிகத்தில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார். கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் சக்தி அம்மாவிற்கு மாலை அணிவித்து ஆசி பெற்றனர்.
ஜெயந்தி விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், முன்னாள் எம்.எல்.ஏ.கலையரசு, ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு, அறங்காவலர் சவுந்தரராஜன், மேலாளர் சம்பத், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, மற்றும் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story