பொன்னேரியில் வாடகை வாங்க மறுப்பு; வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


பொன்னேரியில் வாடகை வாங்க மறுப்பு; வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:00 AM IST (Updated: 3 Jan 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியில் வாடகை வாங்க மறுப்பு தெரிவித்ததால் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி,

பொன்னேரி பேரூராட்சிக்கு சொந்தமான பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் வணிக வளாகங்களில் 51 கடைகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த கடைகளை வியாபாரிகள் டெண்டர் மூலம் வாடகைக்கு எடுத்து 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் கடைகளுக்கு டெண்டர் பணியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதற்கு கடையை வாடகைக்கு எடுத்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடை வாடகையை அதிகரித்து தருகிறோம். டெண்டர் விட வேண்டாம் என்று கடைக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நிர்வாகம் மீண்டும் டெண்டர் பணியை தொடங்கியது.

இதனை எதிர்த்து பொன்னேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் 9 மாதங்களாக கடைகளுக்கு செலுத்தவேண்டிய வாடகை தொகையை வாங்க பேரூராட்சி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடை வியாபாரிகள் நேற்று தங்கள் கடைகளை அடைத்துவிட்டு பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று வாடகை பணம் வாங்க வேண்டுகோள் விடுத்தனர். பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் பேரூராட்சி அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பேரூராட்சி அலுவலர்கள், வியாபாரிகளிடம் வங்கி வரைவோலையாக கொடுத்தால் வாடகை பாக்கியை வரவு வைத்து கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story