குன்னமங்கலம் அருகே முதியவர் குத்திக்கொலை - தொழிலாளி கைது
குன்னமங்கலம் அருகே முதியவரை குத்திக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோழிக்கோடு,
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). இவர் கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் அருகே உள்ள சித்தகடவு கிராமத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே சுரேஷ்பாபு (60) என்பவர் குடியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் காலையில் கனகராஜ் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சுரேஷ்பாபு வழிமறித்து மீண்டும் தகராறு செய்துள்ளார். இரண்டு பேருக்கும் இடையே தகராறு முற்றியதில் சுரேஷ்பாபு தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கனக ராஜை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story