முழுஅடைப்பு போராட்டம், பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்
முழுஅடைப்பு போராட்டம் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. லாரிகள் ஓடாததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
சபரிமலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததை கண்டித்து சபரிமலை கர்ம சமிதி அமைப்பு கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன. பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்துமிடம் வெறிச்சோடி காணப்பட்டது. கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி, கோவிந்தாபுரம் வரை டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.
பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், பரம்பிக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோன்று கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் லாரிகள் சரக்குகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள், பால் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பொருட்கள் தேக்கம் அடைந்ததால் கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
பாலக்காட்டில் நேற்று முன்தினம் லாரிகளின் கண்ணாடியை உடைத்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக எல்லை பகுதியில் தமிழக-கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து வந்து பொள்ளாச்சி வழியாக கேரளா செல்லும் வாகனங்களை போலீசார் பாதுகாப்பு கருதி சோதனை சாவடிகளில் நிறுத்தி வைத் தனர்.
Related Tags :
Next Story