கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளை பறித்து சென்ற இலங்கை மீனவர்கள்


கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளை பறித்து சென்ற இலங்கை மீனவர்கள்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:15 AM IST (Updated: 4 Jan 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளை, இலங்கை மீனவர்கள் பறித்து சென்றனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடந்து வருகிறது. இதனால் நாகை, காரைக்கால்மேடு, அக்கரைப்பேட்டை, தரங்கம்பாடி, பாம்பன் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகத்திற்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த ஞானவேல், பிரகாஷ், வீரமணி, ஜெயக் குமார் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு படகில் 5-க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் அங்கு வந்தனர். அவர்கள், ஞானவேல் சென்ற படகை சுற்றி வளைத்தனர். இதனால் ஞானவேல் உள்பட 4 பேரும் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றனர்.

அப்போது இலங்கை மீனவர்கள், கத்தியை காட்டி மிரட்டி ஞானவேல் சென்ற படகில் இருந்த 300 கிலோ எடையுள்ள வலைகளை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. வலைகளை பறிகொடுத்த மீனவர்கள் 4 பேரும் நேற்று கோடியக்கரைக்கு திரும்பி வந்தனர்.

பின்னர் அவர்கள் நடந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கூறினர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்குவதும், படகு மற்றும் மீன்பிடி வலைகளை பறித்து செல்வதும் இங்கு அடிக்கடி நடந்து கொண்டு இருக்கிறது. ஆதலால் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story