வீட்டில் உலோக சிலைகள் பதுக்கி வைப்பு: சென்னை தொழில் அதிபர் கிரண்ராவுக்கு ஜாமீன் கோர்ட்டு உத்தரவு


வீட்டில் உலோக சிலைகள் பதுக்கி வைப்பு: சென்னை தொழில் அதிபர் கிரண்ராவுக்கு ஜாமீன் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Jan 2019 4:30 AM IST (Updated: 4 Jan 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் உலோக சிலைகளை பதுக்கி வைத்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் கிரண்ராவ் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஆஜரானார்.

கும்பகோணம்,

சென்னை கோபால புரத்தை சேர்ந்தவர் வினோத் ஆர்.சேத்தி. இவருடைய மனைவி கிரண்ராவ் (வயது 54). தொழில் அதிபரான இவருடைய வீட்டில் உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில் வீட்டில் நிலத்துக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால உலோகம் மற்றும் கற்சிலைகளை போலீசார் கைப்பற்றினர். இந்த சிலைகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கிரண்ராவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

ஆனால் கிரண்ராவ், சிலை கடத்தல் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சிலை கடத்தல் வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி கிரண்ராவ் நேற்று கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து நீதிபதி அய்யப்பன்பிள்ளை, கிரண்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.

Next Story