திருவாரூரில் பாதுகாப்பு பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு


திருவாரூரில் பாதுகாப்பு பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 4 Jan 2019 4:15 AM IST (Updated: 4 Jan 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிகள் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி பாதுகாப்பான முறையில் நடத்திட போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இரவு, பகலாக சுழற்சி முறையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தாசில்தார் நிலையிலான அலுவலரும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தொகுதி முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உடன் இருந்தார்.

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகமான உதவி கலெக்டர் அலுவலகத்தை பார்வையிட்ட டி.ஐ.ஜி., அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் குறித்த விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டறிந்தார். மேலும் சோதனை சாவடிகளுக்கு சென்று போலீசார் நடத்திய வாகன சோதனைகளையும் பார்வையிட்டார்.

அப்போது தேர்தலை அமைதியான முறையில் நடத்திட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.

Next Story