தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தண்ணீர் பாக்கெட், கைப்பை உள்பட 14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது.
எனவே உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய முடியும். எனவே பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story