ஊஞ்சல் ஆடிய போது கயிறு கழுத்தில் இறுக்கி இறந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை


ஊஞ்சல் ஆடிய போது கயிறு கழுத்தில் இறுக்கி இறந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Jan 2019 4:45 AM IST (Updated: 4 Jan 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் ஊஞ்சல் ஆடியபோது கயிறு கழுத்தில் இறுக்கி இறந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் செய்ததாக கூறி அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

குமாரபாளையம், 

குமாரபாளையம் பைபாஸ் சாலை குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி சின்னதம்பி. இவரது மனைவி ராணி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 11). 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் வீட்டில் பிரியதர்ஷினி ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தபோது திடீரென ஊஞ்சலில் உள்ள கயிறு கழுத்தை சுற்றி இறுக்கி மூச்சுத்திணறி இறந்தாள். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மாணவியின் உடலை பெற்றுச்செல்வதற்காக அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை 8 மணியளவில் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள் சிவசங்கர், அய்யப்பன் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்யாமல் காலதாமதம் செய்ததாக கூறி, மாணவியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் ஏன் பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் செய்கிறீர்கள்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையறிந்த குமாரபாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவியின் உறவினர்களை சமாதானம் செய்தனர். பின்னர் சுமார் 11 மணியளவில் சிறுமியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story