தஞ்சை பகுதியில் நெல் அறுவடை பருவத்தில் விவசாயிகளுக்கு உணவாகும் எலிகள் ரூ.100-க்கு 4 என விற்பனை ஆகிறது


தஞ்சை பகுதியில் நெல் அறுவடை பருவத்தில் விவசாயிகளுக்கு உணவாகும் எலிகள் ரூ.100-க்கு 4 என விற்பனை ஆகிறது
x
தினத்தந்தி 3 Jan 2019 10:30 PM GMT (Updated: 3 Jan 2019 7:32 PM GMT)

தஞ்சை பகுதியில் நெல் அறுவடை பருவத்தில் வயல்களில் பிடிபடும் எலிகளை விவசாயிகள் உணவாக்கி கொள்கிறார்கள். ரூ.100-க்கு 4 எலிகள் என விற்பனையும் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்,

நெல், கோதுமை, மக்காச்சோளம், சிறுதானியங்கள், கரும்பு, நிலக்கடலை, எள், காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகிய பல பயிர்களை எலிகள் தின்று சேதப்படுத்துகின்றன. உணவு பொருட்கள் வருடம் முழுவதும் கிடைக்காத நிலை இருந்தாலும் அவற்றை சமாளிக்கும் வகையில் பெரும்பாலான எலி வகைகள், தானிய உணவு வகைகளை தான் தோண்டும் வளைகளுக்குள் பதுக்கி வைக்கின்றன.

விளை பொருட்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு நஷ்டத்தை எலிகள் ஏற்படுத்துகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு சம்பா, தாளடி சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். முன்பட்ட சம்பா நெற்பயிர்கள் நன்றாக விளைந்து சில பகுதிகளில் அறுவடை பணியும் நடைபெற்று வருகிறது. கஜா புயல் தாக்கத்தில் இருந்து தப்பிய நெற்பயிர்களை கண்டு மகிழ்ச்சியாக இருந்த விவசாயிகளுக்கு எலி உருவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வயல்களில் நெற்பயிர்களை இரையாக்க கதிர்களை கடித்து எலிகள் சேதப்படுத்துகின்றன. வயல்களில் உள்ள வரப்புகளில் எலிகள் வளைகள் அமைத்து நெல் பயிர்களை பாழ்படுத்தி வருகின்றன. விளைந்த நெற்பயிர்களை எலிகள் கடித்து துண்டாக்கி, அவற்றை தனது வளைகளுக்குள் கொண்டு சென்று சேகரித்து வைக்கின்றன. எலிகளை பிடிக்க விவசாயிகள் சிலர் இடுக்கிகளை பயன்படுத்துகின்றனர்.

அப்படியும் எலிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. விவசாய நிலங்களை சேதப்படுத்தும் எலிகளை பயிர் அறுவடைக்கு பின் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டி சமப்படுத்தியும், புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்துகின்றனர்.

தஞ்சை மாவட்டம் காட்டூர், வரவுக்கோட்டை பகுதியில் சம்பா நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை முடிவடைந்த வயல்களில் எலிகளை பிடிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டூர் பகுதியில் உள்ள ஒரு வயலில் அறுவடை முடிந்து வைக்கோல்கள் மட்டும் கிடந்தன. அந்த வயலில் விவசாயிகள் சிலர், வரப்புகளை மண்வெட்டியால் வெட்டி சமப்படுத்தி கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, அவர்கள் வரப்புகளை வெட்டி, எலி வளைகளுக்குள் இருக்கும் எலிகளை உயிருடன் பிடித்து கொண்டிருந்தனர். 20-க்கும் மேற்பட்ட எலிகளை அவர்கள் பிடித்திருந்தனர்.

எலி வளைகளுக்குள் நெல்மணிகள் ஏராளமாக இருந்தன. அவற்றை எல்லாம், கையில் அள்ளிய விவசாயிகள், எவ்வளவு நெல்லை வீணாக்கி இருக்கிறது என வேதனையுடன் காண்பித்தனர். இந்த எலிகளை விற்பனை செய்வோம். விற்பனையாகவில்லை என்றால் எலியை குழம்பு வைத்து உணவாக பயன்படுத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர். மட்டன், சிக்கன், மீன், புறா, நண்டு, இறால், முயல் என அசைவ உணவு வகைகள் ஏராளமாக உள்ளன. நெல் அறுவடை பருவத்தில் எலியை விவசாயிகள் பலர் உணவாக பயன்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, நெல் விளைந்து நிற்கும்போது நெல்மணிகளை எலிகள் கடித்து, அதனுடைய வளைகளுக்குள் கொண்டு சென்றுவிடும். கோடை காலத்தில் உணவுக்கு பயன்படும் வகையில் ஏராளமான நெல்மணிகளை சேகரித்து வைத்து கொள்ளும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. தற்போது நெல் அறுவடை முடிந்துவிட்டது. நெல்லை சேதப்படுத்திய எலிகளை இப்போது நாங்கள் பிடித்து வருகிறோம்.

வரப்புகள் சேதம் அடைந்தாலும் பரவாயில்லை என எலி வளைகளை அழிப்பதுடன், அதில் தங்கியிருக்கும் எலிகளை உயிருடன் பிடிக்கிறோம். அடுத்து உளுந்து சாகுபடி செய்ய உள்ளோம். இப்போது எலிகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் உளுந்து பயிரையும் சேதப்படுத்தும். உளுந்து மட்டுமின்றி எள் உள்ளிட்ட எந்த பயிர்களை சாகுபடி செய்தாலும் அவற்றை சேதப்படுத்தி நஷ்டத்தை நமக்கு ஏற்படுத்தும் என்பதால் எலிகளை பிடிக்கிறோம்.

உயிருடன் பிடிக்கும் எலிகளை விலைக்கு யாராவது கேட்டால் 4 எலிகளை ரூ.100-க்கு விற்போம். இல்லையென்றால் எங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து உணவாக உட்கொள்வோம். ஆண்டுதோறும் அறுவடை முடிந்த பின்னர் இப்படி எலிகளை பிடித்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று தான். எலியை கறிக்குழம்பு வைத்தும், வறுவல் செய்தும் சாப்பிடலாம். உடல் நலத்திற்கு நன்று. முதுகுவலியை போக்கும் தன்மை எலிக் கறிக்கு உண்டு என்றனர்.

Next Story