சேலம் தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு 3 பேர் கைது
சேலம் தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சுமலதா (வயது 31). இவர் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். பின்னர் மாலையில் சுமலதா தாதகாப்பட்டி கேட்டிற்கு பஸ்சில் வந்தார். பஸ்நிறுத்தத்தில் இருந்து அவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இதனிடையே பஸ்சில் யாராவது நகையை திருடி சென்று விடக்கூடாது என்பதற்காக, சுமலதா நகையை கழற்றி மணிபர்சில் வைத்திருந்தார்.
சுமலதாவை பின்தொடர்ந்து அந்த வழியாக 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சுமலதாவின் கையில் இருந்த மணிபர்சை திடீரென பறித்தனர். இந்த வழிப்பறி சம்பவத்தால் சுமலதா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து, அந்த வாலிபர்கள் 3 பேரையும் பிடிக்க முயன்றனர். உடனே அந்த வாலிபர்கள் பொதுமக்களை மிரட்டி விட்டு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக சுமலதா அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சுமலதாவிடம் நகை, பணத்தை பறித்தவர்கள் சேலம் குகை பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (21), தாதகாப்பட்டி சண்முகா நகரை சேர்ந்த பிரகாஷ் (23), மணியனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை, செல்போன் மீட்கப்பட்டது. நேற்று விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். கார்த்திக் மீது வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், பிரகாஷ், விஜயகுமார் மீது சில வழக்குகளும் உள்ளன. இதில் கார்த்திக், பிரகாஷ் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story