பெரம்பலூர் மாவட்டத்தில் 28 ஆயிரம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு அதிகாரி தகவல்


பெரம்பலூர் மாவட்டத்தில் 28 ஆயிரம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:30 AM IST (Updated: 4 Jan 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் 28 ஆயிரம் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூர்,

மத்திய அரசின் விரிவுபடுத்தப்பட்ட இ.பி.எம்.யு.ஒய்-2 பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். திருச்சி மேலாளர் ரமேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் கஜபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஜெய்சங்கர் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கினார். இதில் பெரம்பலூர் சமையல் எரிவாயு விற்பனை ஏஜென்சின் உரிமையாளர்கள் கஜேந்திரன், பிரபாகரன், கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது அந்த திட்டம் இ.பி.எம்.யு.ஒய்-2 பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டமாக விரிவுபடுத்தப்பட்டு ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு மத்திய அரசு வழங்கி வருகிறது. 2020-க்குள் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் கீழ் 6 கோடி இணைப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை இந்த திட்டத்தில் 28 ஆயிரத்து 104 இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அனைவருக்கும் பொருந்தும், இந்த திட்டத்திற்கு சாதி சான்றிதழ் தேவையில்லை. இதுவரை சமையல் எரிவாயு இல்லாத குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவியின் பெயரில் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு குடும்ப அட்டை, ஆதார் கார்டு, கணக்கு வைத்திருக்கும் வங்கியின் புத்தகம் இருந்தால் போதும், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன் ஏதும் சமையல் எரிவாயு இணைப்பு வாங்கியிருக்க கூடாது. அப்படி இருந்தால் அருகே உள்ள சமையல் எரிவாயு விற்பனையாளர் ஏஜென்சியுடன் கொடுத்து 3 நாட்களில் இந்த திட்டத்தில் இலவச சமையல் எரிவாயு பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story