திருவாடானை அருகே புதிய வீடுகள் கட்டித்தர அதிகாரிகள் உறுதி


திருவாடானை அருகே புதிய வீடுகள் கட்டித்தர அதிகாரிகள் உறுதி
x
தினத்தந்தி 4 Jan 2019 4:15 AM IST (Updated: 4 Jan 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அருகே சமத்துவபுரம் காலனியில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

தொண்டி,

திருவாடானை சமத்துவபுரம் அருகே நரிக்காரர்கள் காலனியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் அரசால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுக்கப்பட்ட 36 தொகுப்பு வீடுகள் இடிந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் திறந்தவெளியில் குடியிருந்து வருகிறோம். எனவே புதிய வீடுகள் கட்டித்தரவேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றித்தரக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவின் பேரில் துணை ஆட்சியர் சிவதாஸ், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் செந்தில்குமார், திருவாடானை தாசில்தார் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் ஆகியோர் திருவாடானை சமத்துவபுரம் நரிக்காரர்கள் காலனிக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது 152 பேருக்கு புதிதாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அளந்து சர்வே செய்து தரவேண்டும். இந்த பகுதியில் உள்ள பழைய காலனி அருகிலேயே புதிய வீட்டுமனைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இப்பகுதியில் இடிந்துள்ள வீடுகளுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து புதிதாக வழங்கப்பட்டுள்ள வீட்டுமனை இடத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது காலனியில் தற்போது 36 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படும் என்று உறுதி அளித்தனர். பயனாளிகள் ஆதார் அட்டை, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

அப்போது மருத்துவர் சங்க தலைவர் அழகு தலைமையில் அந்த பகுதியில் வீட்டுமனை பட்டா பெற்றுள்ளவர்கள் அதிகாரிகளை சந்தித்து காலனி அருகில் சலவை தொழிலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சமூகத்தை சேர்ந்த 48 பேருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் புதிதாக வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது எனவும், அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Next Story