ரூ.108 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் பழனி, தொப்பம்பட்டி மக்களுக்கு கைகொடுக்குமா?
பழனி, தொப்பம்பட்டி மக்களுக்காக ரூ.108 கோடியில் செயல்படுத்தப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கைகொடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பழனி,
பழனி, தொப்பம்பட்டி ஒன்றிய பகுதி மக்களின் நலனுக்காக ரூ.108 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியில் இருந்து குழாய்கள் மூலம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டுவரப்படும். பின்னர் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும்.
அதன்படி தற்போது பழனி, நெய்க்காரப்பட்டி, கீரனூர், தொப்பம்பட்டி, சண்முகம்பாறை, கரடிகூட்டம், பாப்பம்பட்டி, சிவகிரிபட்டி, மேல்கரைப்பட்டி, வாகரை, பொருளூர், மரிச்சிலம்பு, கொழுமம் கொண்டான், தாளையூத்து உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ரூ.108 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பழனி உள்ளிட்ட மற்ற பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும். வருகிற மே மாதத்துக்குள் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அது வெற்றியடைந்தால் பழனி, தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது என்றனர்.
திட்டம் தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பழனி-உடுமலை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்னும் குழாய்கள் பதிக்கப்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் மே மாதத்துக்குள் பணிகள் நிறைவடையுமா? என்பது கேள்விக்குறியே. இதனால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் பழனி, தொப்பம்பட்டி ஒன்றிய மக்களுக்கு கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு மட்டுமே மிஞ்சி இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story