பாலக்கோடு அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை ஆஸ்பத்திரி கண்ணாடியை உறவினர்கள் அடித்து நொறுக்கினர்
பாலக்கோடு அருகே குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சாணார் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் தமிழரசன் (வயது 26). இவர் வீடுகளுக்கு குடிநீர் விற்பனை செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் 2 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சாந்தி சாப்பிட மறுத்து விட்டதாக தெரிகிறது. அதற்கு தமிழரசன் சாப்பிடவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி உள்ளார். இருப்பினும் சாந்தி சாப்பிட மறுத்து வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தமிழரசன் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது தமிழரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து தமிழரசனின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் திடீரென ஆஸ்பத்திரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
பின்னர் அவர்கள் இறந்த தமிழரசனின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சாணார் தெருவுக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story