அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஈரோட்டில் 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு,
அனுமன் ஜெயந்தி விழா நாளை (சனிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு கணபதி அபிஷேகமும், 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள். விழாவையொட்டி கோவில்களில் பக்தர்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கோவிலின் வார வழிபாட்டுக்குழு சார்பில் பக்தர்களுக்கு லட்டு மற்றும் கையில் கட்டும் ஆரஞ்சு நிற கயிறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
லட்டு தயாரிக்கும் பணி ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வழிபாட்டுக்குழு நிர்வாகிகள் கூறும்போது, “அனுமன் ஜெயந்தி விழாவில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு தனித்தனி பாக்கெட்டுகளில் போடப்படுகிறது. இதற்காக 1,500 கிலோ கடலை மாவு, 1,800 கிலோ சர்க்கரை, 850 லிட்டர் சமையல் எண்ணெய், 75 கிலோ முந்திரி, 60 கிலோ உலர் திராட்சை ஆகிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. 60 பேர் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்”, என்றார்.
Related Tags :
Next Story