“ரூ.1,000 பொங்கல் பரிசு தேர்தலுக்கான டோக்கன்” முத்தரசன் குற்றச்சாட்டு


“ரூ.1,000 பொங்கல் பரிசு தேர்தலுக்கான டோக்கன்” முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Jan 2019 4:29 AM IST (Updated: 4 Jan 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

“அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.1,000 பொங்கல் பரிசு தேர்தலுக்கான டோக்கன்” என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூரில் கிரானைட் முறைகேடு தொடர்பான ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் அறிக்கையை உடனே வெளியிட கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

தாலுகா செயலாளர் மெய்யர் தலைமை தாங்கினார். துணை செயலாளர் பெரியவர் முன்னிலை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக அதிகாரி சகாயம் தாக்கல் செய்த அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். கீழவளவு, கீழையூரில் உள்ள அரசுக்கு சொந்தமான டாமின் குவாரிகளை அரசு திறந்து, கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க வேண்டும். மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் 300 பேர் இறந்தனர். பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆனால் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பெரும் முதலாளிகளையும், கருப்பு பணம் வைத்திருப்போரையும் பாதிக்கவில்லை.

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பவில்லை. தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் அவசர அவசரமாக இடைத்தேர்தல் நடத்துவது ஏன்?

மத்திய-மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவசர நிலையில் இடைத்தேர்தல் நடத்தி வெற்றி காண நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது. திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியே வெற்றிபெறும். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1,000 பொங்கல் பரிசு என்பது தேர்தலுக்கான டோக்கன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story