தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் தரை தட்டி நின்றதால் பரபரப்பு 3½ மணி நேரம் போராடி மீட்பு


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் தரை தட்டி நின்றதால் பரபரப்பு 3½ மணி நேரம் போராடி மீட்பு
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 4 Jan 2019 11:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் தரை தட்டி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கப்பல் 3½ மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் தரை தட்டி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கப்பல் 3½ மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது.

வ.உ.சி. துறைமுகம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. அதே போன்று தூத்துக்குடியில் உள்ள தூத்துக்குடி அனல்மின்நிலையம், என்.டி.பி.எல் உள்ளிட்ட அனல் மின்நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலக்கரி, கப்பல் தளத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் அனல்மின்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

சமீபத்தில் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும், பல்வேறு நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவைக்காகவும் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி துறைமுகத்தின் மிதவை ஆழம் 14.5 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு நேரடி சரக்கு போக்குவரத்து சேவை கடந்த மாதம் தொடங்கியது. அதேபோன்று பெரிய கப்பல்களும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரத்தொடங்கின.

தரை தட்டியது

இந்த நிலையில் தாய்லாந்தை சேர்ந்த ‘கிரானா நாரி’ என்ற கப்பல் இந்தோனேசியாவில் இருந்து 56 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் வழியாக நேற்று முன்தினம் மதியம் தூத்துக்குடியை வந்தடைந்தது. துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த கப்பல் நேற்று காலை துறைமுகத்துக்குள் வந்து நிலக்கரியை இறக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை சுமார் 9-30 மணிக்கு கப்பல் துறைமுக வாயிலை நோக்கி, அதற்கான வழித்தடத்தில் நகர்ந்தது.

அப்போது கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் கப்பல் மெதுவாக பக்கவாட்டில் நகர்ந்து, வழித்தடத்தில் ஒருபுறம் ஒதுங்கியபோது திடீரென தரை தட்டி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 3 இழுவை கப்பல்கள் விரைந்தன. அந்த கப்பல்கள் மூலம் மதியம் சுமார் 1 மணியளவில் தரை தட்டி நின்ற கப்பலை இழுத்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்குள் கொண்டு வந்தனர். சுமார் 3½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த கப்பல் மீட்கப்பட்டது. அங்குள்ள நிலக்கரி சரக்கு தளம் 2-ல் கப்பல் நிறுத்தப்பட்டு, சரக்கு கையாளப்பட்டு வருகிறது.

கடல் மட்டம் உயர்வு

இதுகுறித்து துறைமுக அதிகாரிகள் கூறும்போது, ‘கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கப்பல் ஒரு பக்கவாட்டில் ஒதுங்கி உள்ளது. அதே நேரத்தில் கடல் மட்டம் குறைந்து இருந்ததால் மணலில் உரசி தரை தட்டி உள்ளது. மதியம் கடல் மட்டம் உயரத் தொடங்கியதால், இழுவை கப்பல்கள் மூலம் கப்பல் மீட்கப்பட்டது’ என்று தெரிவித்தனர்.

Next Story