திண்டுக்கல்லில் தொழிலாளி கொலை: பழிக்குப்பழி வாங்கி விடுவாரோ என பயந்து கொன்றனரா?
திண்டுக்கல்லில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், பழிக்குப்பழி வாங்கி விடுவாரோ? என பயந்து அவரை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறமுள்ள முத்தழகுபட்டியை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 48). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது மகள் ஹெலன் சோபியாவை (17) பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக முருகபவனத்துக்கு மொபட்டில் வந்தார். அங்கு மகளை இறக்கிவிட்டுவிட்டு மொபட்டில் திரும்பி சென்றுகொண்டு இருந்தார்.
இந்திராநகர் அருகே வந்த போது அந்த பகுதியில் மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அருள்சாமியை மறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் மொபட்டை கீழே போட்டு விட்டு ஓடினார். ஆனால் அவரை ஓட, ஓட விரட்டி அந்த கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்றது.
இந்த கொலை குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதத்தில் கொலை நடந்ததாக தெரிய வருகிறது. அதாவது, அருள்சாமியின் தம்பியும் பிரபல ரவுடியுமான பாஸ்கருக்கும் (36), திண்டுக்கல் கொள்ளுப்பட்டறையை சேர்ந்த சரவணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதில் சரவணன் தரப்பை சேர்ந்த அய்யம்பெருமாள், ராம்குமார் ஆகியோரை பாஸ்கர் தரப்பினர் கொலை செய்துள்ளனர். இதனால் பாஸ்கரை பழிக்குப்பழியாக சரவணன் தரப்பினர் கொன்றுவிட்டனர். தம்பியை கொன்றதற்காக அருள்சாமி தங்களை பழிவாங்கிவிடக்கூடாது என பயந்து சரவணன் தரப்பினர் அவரை கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜஸ்டின் பிரபாகரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு விரைந்துள்ள தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story