சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம் வைகோ வலியுறுத்தல்


சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம் வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jan 2019 3:00 AM IST (Updated: 5 Jan 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

நெல்லை, 

சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருவாய் கோட்டம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு, வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது. ஒரு வருவாய் கோட்டம் அமைப்பதற்கு தேவையான அனைத்து மூலக்கூறுகளையும், உத்தேசமாக அமைக்கப்பட வேண்டிய சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் பூர்த்தி செய்கிறது. புதிதாக உருவாக்கப்பட வேண்டிய சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய மூன்று வருவாய் வட்டங்கள் உள்ளன. இந்த மூன்று வருவாய் வட்டங்களும் மொத்தம் 1,211.56 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த பரப்பளவு சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம் அமைத்திட போதுமானதாகும்.

இதுதவிர சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய மூன்று வட்டங்களிலும் மொத்தம் 12 குறுவட்டங்களும், 100 வருவாய் கிராமங்களும் உள்ளன. அதே போல் இம்மூன்று வட்டங்களிலும் 2015-ம் ஆண்டு நிலவரப்படி மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 33 ஆயிரத்து 928 ஆகும். இவை அனைத்தும் வருவாய் கோட்டம் அமைக்க போதுமானதாகும்.

கலெக்டர் பரிந்துரை

நெல்லையை தலைமையிடமாக கொண்டு தற்போது செயல்பட்டு வரும் வருவாய் கோட்டாட்சியரால் சங்கரன்கோவில், திருவேங்கடம் என்று பல கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது நடைமுறையில் சிரமமான காரியமாகும். பொதுமக்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சிரமங்களை களைந்திடும் வகையிலும் குறைந்தபட்சம் மூன்று வருவாய் வட்டங்கள் இருப்பின் அதனை ஒருங்கிணைத்து வருவாய் கோட்டம் அமைக்கலாம் என்ற விதியை பின்பற்றியும், பொதுமக்களின் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையிலும் சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம் அமைத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளருக்கு, நெல்லை மாவட்ட கலெக்டர் எழுதியுள்ள கடிதத்தில், சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம் அமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளதை ஏற்று, மேலும் காலதாமதம் செய்யாமல், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story