செங்கோட்டையில் நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


செங்கோட்டையில் நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Jan 2019 10:00 PM GMT (Updated: 2019-01-05T00:44:01+05:30)

செங்கோட்டையில் நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

செங்கோட்டை, 

செங்கோட்டையில் நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு

திருமங்கலம்-கொல்லம் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு விருதுநகர் மாவட்டம் முதல் நெல்லை மாவட்டம் புளியரை வரையுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு வகையில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் உள்ளூர் அலுவலகங்களை முற்றுகையிட்டும், கோரிக்கை மனுக்கள் அளித்தும் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று செங்கோட்டையில் அமைந்துள்ள நிலம் எடுப்பு தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் மோகன் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பும், எதிர்ப்பு மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நெல்லை மாவட்டம் வடகரை, பண்பொழி, வாவாநகரம், புளியரை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திரண்டு வந்து தங்களுடைய எதிர்ப்பை மனுக்கள் மூலம் பதிவு செய்தனர்.

முற்றுகை

மேலும் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுடைய நிலம் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கக்கூடாது. அந்த திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், நான்கு வழிச்சாலைக்கு தங்களது நிலம் கையகப்படுத்தினால் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story