பெண்ணை கற்பழிக்க உடந்தை: மூதாட்டிக்கு 10 ஆண்டு சிறை சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை கற்பழிக்க உடந்தை: மூதாட்டிக்கு 10 ஆண்டு சிறை சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Jan 2019 4:15 AM IST (Updated: 5 Jan 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கற்பழிக்க உடந்தையாக இருந்த மூதாட்டிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டம் கருப்பூர் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவருடைய மனைவி பாப்பா (வயது 68). 2 பேரும் கடந்த 28.6.2014 அன்று அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 24 வயது மகளிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை தங்களது வீட்டிற்கு கடத்திச்சென்றனர். பின்னர் அந்த பெண்ணை, வெள்ளையன் அவரது வீட்டில் வைத்து கற்பழித்தார். இதற்கு பாப்பா உடந்தையாக இருந்து உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையன், பாப்பா ஆகிய 2 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கு நடந்து கொண்டிருந்த போது வெள்ளையன் இறந்து போனார். இந்த வழக்கில் நேற்று சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு அளித்தார். அதில் பக்கத்து வீட்டு பெண்ணை கடத்தியதற்காக மூதாட்டி பாப்பாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அந்த பெண்ணை தனது கணவரே கற்பழிக்க உடந்தையாக இருந்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையொட்டி மூதாட்டி பாப்பாவை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் அரசு தரப்பில் வக்கீல் காந்திமதி ஆஜராகி வாதாடினார்.

Next Story