திண்டுக்கல் அருகே, கோவை பஸ்-லாரி மோதல்; மூதாட்டி பலி - 19 பேர் படுகாயம்
திண்டுக்கல் அருகே கோவை பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டதில் மூதாட்டி பலியானார். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
கன்னிவாடி,
நெல்லையில் இருந்து கோவை நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். பஸ்சை தென்காசியை சேர்ந்த மணிகண்டன் (வயது 45) ஓட்டினார். இதே போல ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.
இரண்டு வாகனங்களும் நேற்று மதியம் திண்டுக்கல் அருகே உள்ள பாலம்ராஜக்காபட்டியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் சாலையோரத்தில் இருந்த பள்ளத்துக்குள் அரசு பஸ் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த பாலம்மாள் (86), ஆரப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (45), முருகநேரியை சேர்ந்த கோகிலா (19), புதுரை சேர்ந்த சிவக்குமார், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பவதாரணி (21), விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த பாண்டி (45) உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பாலம்மாள் கவலைக்கிடமான நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story