இடைத்தேர்தலை காரணம் காட்டி புயல் நிவாரணம் நிறுத்தம்: 10-ந்தேதி தாசில்தார் அலுவலகம் முற்றுகை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு


இடைத்தேர்தலை காரணம் காட்டி புயல் நிவாரணம் நிறுத்தம்: 10-ந்தேதி தாசில்தார் அலுவலகம் முற்றுகை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் இடைத்தேர்தலை காரணம் காட்டி புயல் நிவாரணம் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து வருகிற 10-ந் தேதி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

திருவாரூர், 

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மன்னார்குடி நகர செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான செல்வராசு கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், தொகுப்பு வீடுகள், சேதமடைந்த மாடி வீடுகளுக்கும் நிவாரணம் வழங்காமல் வருவாய் கிராம வாரியாக கணக்கெடுத்து, ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கி குளறுபடி செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டு தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையையும், கொந்தளிப்பையும் அரசு கண்டு கொள்ளவில்லை. அரசின் 27 வகையான நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்காமல், அரசியல் சுய லாப நோக்கத்துடன் சில பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.


திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை காரணம் காட்டி நிவாரண பணியினை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட அனை வருக்கும் முழு நிவாரணம் வழங்க கோரியும் வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ள 8 தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். கஜா புயல் பாதித்த திருவாரூர் மாவட்டத்தில் மகளிர்குழு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாவட்ட தலைவர் ரெங்கராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வீராச்சாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகரஆசாத், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் முருகேசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story