தங்க கட்டிகளை பதுக்க முயற்சி: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
பொறையாறு அருகே தங்க கட்டிகளை பதுக்க முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள நண்டலாறு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொறையாறு போலீசார், சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு பஸ்சில் போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பஸ் அங்கிருந்து சென்ற பின்னர் சோதனை சாவடியை நோக்கி போலீசார் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு புதரில் ஒரு பை கிடந்தது.
உடனே போலீசார் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். சோதனையில், அந்த பையில் 26½ தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. தங்க கட்டிகளின் மொத்த எடை 3 கிலோ 75 கிராம். இதன் மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
இந்த தங்க கட்டிகள் பொறையாறு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பொறையாறு போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்க கட்டிகளை பார்வையிட்டனர்.
இந்த நிலையில் புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க கட்டிகளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டு ஜெயபால், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகியோர் பதுக்கி தாங்களே பங்கிட்டுக்கொள்ள முயன்றதாக தெரிகிறது. இது குறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
இது குறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விசாரணையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டு ஜெயபால், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகியோர் தங்கத்தை பதுக்க முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தங்க கட்டிகளை பதுக்க முயன்ற சம்பவத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story