பவானிசாகர் அணையின் மேடான பகுதியில் ஏறிய குட்டி யானை தவறி விழுந்து சாவு; சோகத்துடன் சுற்றி நின்ற யானைகள்


பவானிசாகர் அணையின் மேடான பகுதியில் ஏறிய குட்டி யானை தவறி விழுந்து சாவு; சோகத்துடன் சுற்றி நின்ற யானைகள்
x
தினத்தந்தி 5 Jan 2019 3:45 AM IST (Updated: 5 Jan 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் மேடான பகுதியில் ஏறிய குட்டி யானை தவறி விழுந்து இறந்தது. குட்டி யானையை சுற்றி மற்ற யானைகள் சோகத்துடன் கூட்டமாக நின்றன.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள யானை, மான் மற்றும் வனவிலங்குகள் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு சென்று தண்ணீர் குடிப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு வந்து கொண்டிருந்தன.

அப்போது ஒரு குட்டி யானை அணையின் மேடான பகுதியில் ஏற முயன்றது. ஆனால் ஏற முடியவில்லை. இதில் அந்த குட்டி யானை நிலைதடுமாறி கீழே விழுந்து உருண்டது. இதில் அந்த குட்டி யானை இறந்தது. தாய் யானை குட்டி யானையை துதிக்கையால் தூக்க முயன்றது. ஆனால் குட்டியானை அசைவற்று கிடந்தது. பின்னர் மற்ற யானைகள் குட்டி யானையை சுற்றி கூட்டமாக சோகத்துடன் நின்றன. பின்னர் சிறிதுநேரம் கழித்து யானைகள் அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டன.

அப்போது அந்த வழியாக சென்ற அணை உதவிப்பொறியாளர் சிங்காரவடிவேலு இதைப்பார்த்தார். உடனே இதுபற்றி பவானிசாகர் வனச்சரகர் ஜான்சனுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அவர் கால்நடை டாக்டர் அசோகனுடன் அங்கு வந்து இறந்து கிடந்த குட்டி யானையை பார்வையிட்டார்.

பின்னர் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கால்நடை டாக்டர் கூறும்போது, ‘இறந்தது 1½ வயதுடைய பெண் குட்டி யானை’ என்றார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த பகுதியில் குழி தோண்டி குட்டி யானை புதைக்கப்பட்டது.


Next Story