பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் புத்துயிர் பெறும் மண்பாண்ட தொழில்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் மண்பாண்ட தொழில் புத்துயிர் பெறும் என தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகளை தயாரிக்கும் பணி விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பு இப்பகுதியில் லாபகரமான தொழிலாக இருந்து வந்த மண்பாண்ட தொழில் தற்போது நலிவடைந்து விட்டது. ஒருசிலரே மண்பாண்டங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார்கள்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக மண் பாண்டங்களின் புழக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்றும், அதனால் மண்பாண்ட தொழில் புத்துயிர் பெறும் என்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
இதுகுறித்து மண் பாண்ட தொழில் செய்யும் நீலகண்டன் சங்கரன் கூறியதாவது:-
இரு மாதங்களுக்கு முன்பே விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த மண்பானை, மண் அடுப்பு, மண்சட்டி போன்றவை கஜா புயல் காரணமாக சேதமடைந்து விட்டது. இதனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தற்போது மீண்டு தொழிலை தொடங்கி செய்து வருகிறோம். தற்சமயம் எங்களிடம் குறைவான மண் பானைகளே உள்ளன. ஆகவே வெளியூர்களுக்கு பானைகளை அனுப்பி வைப்பதில் சிரமம் உள்ளது.
இந்த தொழில் நலிவடைந்து விட்ட நிலையிலும் பரம்பரையாக செய்து வரும் தொழில் என்பதால் கைவிட மனமில்லை. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததால், மண்பாண்டங்களுக்கு வேலையில்லாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இளம் வயதினர் மண்பாண்ட தொழிலில் ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story