திருப்பூரில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ‘என்னுடன் வந்து விடு’ என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு


திருப்பூரில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ‘என்னுடன் வந்து விடு’ என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Jan 2019 5:30 AM IST (Updated: 5 Jan 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரை என்னுடன் வந்து விடு என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நல்லூர்,

திருப்பூர் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா(வயது 19). இவர் முதலிபாளையம் சிட்கோவில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த அண்ணாநகரை சேர்ந்த பழனிசாமியின் மகன் நவீன்குமாரை(26), சூர்யா காதலித்தார். இருவரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து நவீன்குமாரும், சூர்யாவும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் 5–ந்தேதி செங்கப்பள்ளி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி இருவரும் நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரது வீட்டு பெற்றோர்களையும் வரவழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதன்பின்னர் சூர்யா தனது காதல் கணவர் நவீன்குமார் வீட்டில் தனது இல்லற வாழ்க்கையை தொடங்கினார். நவீன்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் அவரது தாய் காளீஸ்வரியும் அவர்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவரை நவீன்குமார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார். கடந்த ஒரு மாதத்தில் 3 முறை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே மனக்கசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் நவீன்குமார் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவரது தாய் காளீஸ்வரியும் இளநீர் விற்பதற்காக ராக்கியாபாளையத்துக்கு சென்று விட்டார்.

பின்னர் அன்று இரவு வேலை முடிந்து நவீன்குமார் வீடு திரும்பினார். வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி இருந்தது. பலமுறை மனைவி பெயரை சொல்லி கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்தார். அப்போது வீட்டுக்குள் சூர்யா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி ஒரு மாத காலத்தில் உடல்நிலை சரியில்லாததால் சூர்யா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சூர்யாவின் இடது கையில், ‘நான் உன்னை விட்டு தனிமையில் பிரிந்து செல்ல மனம் இல்லை. என்னுடன் வந்து விடு’ என எழுதி வைத்து உள்ளார். வங்கி பாஸ்புத்தகத்தில், ‘‘நவி மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் செல்கிறேன். என்னுடன் வந்து விடு’’ என எழுதி வைத்து இருக்கிறார். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தார். தற்கொலை செய்து கொண்ட சூர்யா அவரது கணவரையும் என்னுடன் வந்து விடு என கையில் எழுதி வைத்து இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சூர்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு மாத காலம் ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. திருமணம் ஆகி ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story