வேடசந்தூர் அருகே பரிதாபம், கிணற்றில் விழுந்து மகள்கள் பலி; காப்பாற்ற முயன்ற தாய் சாவு


வேடசந்தூர் அருகே பரிதாபம், கிணற்றில் விழுந்து மகள்கள் பலி; காப்பாற்ற முயன்ற தாய் சாவு
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 மகள்கள் பலியாகினர். அவர்களை காப்பாற்ற குதித்த தாயும் பரிதாபமாக இறந்தார்.

வேடசந்தூர்,


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவருடைய மனைவி சுமதி (வயது 23). இவருக்கு சஜீதா (4), 8 மாத குழந்தை தீபிகா என்ற 2 மகள்கள் இருந்தனர். நேற்று மதியம் சுமதி தனது 2 குழந்தைகளுடன் வீட்டின் அருகே உள்ள அவர்களுடைய தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு சுமார் 20 அடி ஆழ கிணற்றில் சஜீதா எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தாள். அந்த கிணற்றில் 7 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. அப்போது கிணற்றின் மேற்பரப்பில் தவழ்ந்து கொண்டிருந்த அவருடைய குழந்தை தீபிகாவும் கிணற்றுக்குள் தவறி விழுந்தாள். உடனே அவர்களை காப்பாற்ற சுமதி கிணற்றில் குதித்தார்.

இந்த நிலையில் தோட்டத்துக்கு சென்ற மனைவி, மகள்கள் திரும்பி வரவில்லை என்று மோகனசுந்தரம் அங்கு அவர்களை தேடி வந்தார். அப்போது கிணற்றின் அருகே சுமதியின் செருப்பு மட்டும் கிடந்தது. உடனே கிணற்றுக்குள் எட்டி பார்த்தார். அங்கு அவருடைய குழந்தை தீபிகா தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்தாள். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று மோகனசுந்தரம் அபய குரல் எழுப்பினார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றுக்குள் குதித்து குழந்தையை மீட்டனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தை தீபிகாவை சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபிகா இறந்தாள். கிணற்றில் விழுந்த சஜீதா, சுமதி ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர்.

தகவலறிந்த வேடசந்தூர் தீயணைப்பு படையினர் அங்கு வந்து கிணற்றில் இருந்த சஜீதா, சுமதியின் உடல்களை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக உடல்களை வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் சுமதியின் தந்தை பழனிச்சாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுமதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார். கிணற்றில் விழுந்து தாய், 2 மகள்கள் பலியான சம்பவத்தால் கோடாங்கிபட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story