வருகிற 8, 9–ந் தேதிகளில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 8, 9–ந் தேதிகளில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி.கே.டி.மு.நாகராஜன்(தி.மு.க.), முத்துக்கண்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கிருஷ்ணன்(காங்கிரஸ்), ரவி(இந்திய கம்யூனிஸ்டு), சிவபாலன்(ம.தி.மு.க.), தனசேகர்(த.மா.கா.) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
இந்தியாவில் விவசாயம் பாழ்பட்டு போய்விட்டது. வேலைவாய்ப்பையும், செல்வத்தையும் வழங்கும் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து விட்டன. பெட்டிக்கடை முதல் மளிகைக்கடை வரை உள்நாட்டு வியாபாரம் உருக்குலைந்து விட்டது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளும், நலன்களும் பறிக்கப்பட்டு விட்டன.
கல்வியும், மருத்துவமும் தனியார் மயமாக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டின் உரிமைகளையும், நலன்களையும் காவு கொடுத்துவிட்டு அ.தி.மு.க. அமைச்சர்கள் உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் கண்டித்து வருகிற 8,9–ந் தேதிகளில் தொழிற்சங்கங்களின் சார்பாக நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துக்கொள்கிறோம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் உள்பட அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கு பெற்று தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிகள் சார்பாக கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.