வேலைநிறுத்தம் தொடர்கிறது: மின்துறை ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்


வேலைநிறுத்தம் தொடர்கிறது: மின்துறை ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:15 PM GMT (Updated: 4 Jan 2019 10:10 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

புதுச்சேரி,

மின்துறை ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கக்கூடாது, ஒருநபர் குழு சிபாரிசு அடிப்படையிலான ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும், மின்மீட்டர் ரீடிங் (கணக்கீடு) எடுக்கும் பணியினை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, நியமன விதிகளுக்கு புறம்பாக பணியமர்த்தப்பட்ட கட்டுமான உதவியாளர்களின் பணி ஆணையினை ரத்து செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை மின்துறை அனைத்து சங்கங்களின் போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்காக நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நேற்று 2–வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. மின்துறை தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் கூடிய அவர்கள் அங்கு அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி குடித்தனர்.

புதுவை மாநிலம் முழுவதிலும் உள்ள 1,500 ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக கட்டணம் கணக்கீடு, மின் கட்டண வசூல், மின் பழுதுபார்க்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு ரூ.5 கோடி வீதம் மின்கட்டண வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே போராட்டம் நடத்திய ஊழியர்களிடம் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் மின் கணக்கீட்டு பணியை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவு தொடர்பாக அவர் உறுதி எதுவும் அளிக்கவில்லை. மற்ற விவரங்கள் தொடர்பாக வருகிற 7–ந்தேதி மின்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.

ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதிமொழி எதுவும் அளிக்கப்படாததால் மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story