சட்ட கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக் வேண்டும்; முன்னாள் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
சட்டக்கல்லூரிகளில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டுமென பெங்களூரு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாதவன் மேனன் தெரிவித்தார்.
காலாப்பட்டு,
புதுவை காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் மாதிரி நீதிமன்ற வழக்காடு போட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. வக்கீல் கோபிகா நம்பியார் தொடக்கவுரையாற்றினார். மூத்த வக்கீல் பிரேமராஜன் வாழ்த்தி பேசினார். சட்டக்கல்லூரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பெங்களூர் தேசிய சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாதவன் மேனன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் மாதவன் மேனன் பேசியதாவது:–
சட்ட கல்வி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் செய்முறை பாடப்பயிற்சியை அதிகரிக்க வேண்டும். தற்போது சட்டப்படிப்பின் தரம் குறைந்து வருகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டக்கல்லூரி மாணவர்கள், இளம் வக்கீல்கள் சமுதாயம் முன்னேற பாடுபட வேண்டும். வக்கீல் தொழில் சாதாரண தொழிலாக மாறிவிட்டது. எனவே வழக்கீல்கள் நேர்மையாகவும், நீதிக்காகவும், மாண்பை காக்கவும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜ் பேசுகையில், ‘மாணவர்கள் வழக்காடு நீதிமன்ற போட்டிகளில் பங்கேற்று திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டியில் பங்கேற்ற அனைவருமே திறமையானவர்கள்‘ என்றார்.