முத்ரா திட்டத்தில் கடன் வழங்க மறுப்பு: வங்கியை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம்


முத்ரா திட்டத்தில் கடன் வழங்க மறுப்பு: வங்கியை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 4 Jan 2019 10:10 PM GMT)

முத்ரா திட்டத்தில் கடன் வழங்க மறுத்ததால் வங்கியை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி விற்பனைக்குழு வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் கேட்டு விண்ணப்பித்த சிலருக்கு கடன் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், விண்ணப்பித்தவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க வவேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று காலை அந்த வங்கியை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது வங்கியின் கதவை இழுத்து மூடி வாசலில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கட்சியின் உழவர்கரை மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தொகுதி தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர்கள் சுப்புராஜ், கமலநாதன், துணைத் தலைவர்கள் நரசிம்மன், உஷா, முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் செல்ல முடியாமலும், வங்கியில் இருந்து வெளியே வரமுடியாமலும் அவதியடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்து கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தினை கைவிட அவர்கள் மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய வங்கி அதிகாரிகள் முத்ரா திட்டத்தின் கீழ் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story