மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் திசை திருப்புகின்றார்; முதல்–அமைச்சர் மீது சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் திசை திருப்புகின்றார்; முதல்–அமைச்சர் மீது சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Jan 2019 11:30 PM GMT (Updated: 4 Jan 2019 10:10 PM GMT)

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் போராட்டம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து மக்களை முதல்– அமைச்சர் திசை திருப்புகின்றார் என்று பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி மாநில அந்தஸ்து கேட்டு அனைத்து கட்சிகள் என்ற போர்வையில் ஆளும் கூட்டணி கட்சியினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு அமைப்புகளுடன் சேர்ந்து மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். கடந்த 50 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்துக்கு துரோகம் இழைத்துவிட்டு இப்போது பாரதீய ஜனதா மீது பொய் புகார்களை கூறி வருகிறார்.

இப்போதும் போராட்டம் நடத்தும் இவர்கள் ஏன் மாநில அந்தஸ்துகோரி கடந்த 50 ஆண்டுகளில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை? அப்போது யார் தடுத்தது? மாநில அந்தஸ்துகோரி போராட்டத்தில் இணைந்திருக்கும் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இதே போராட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏன் நடத்தவில்லை. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க இயலாத முதல்–அமைச்சர் நாராயணசாமி போராட்டம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்புகிறார்.

நாராயணசாமியும், ப.சிதம்பரமும் மத்திய மந்திரிகளாக இருந்தபோது புதுச்சேரிக்கு தனிக்கணக்கு தொடங்கி மாநிலத்துக்கு வரவேண்டிய நிதி குறைய காரணமாக இருந்தவர்கள். இப்போது போலியான போராட்டத்தில் இறங்கி உள்ளனர். புதுவையில் பல முதல்–அமைச்சர்கள் சட்டமன்றத்தில் மாநில அந்தஸ்து குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். அதை எல்லாம் தடுத்தது காங்கிரஸ் கட்சிதான்.

அத்தகைய காங்கிரஸ் கட்சிக்கு பாரதீய ஜனதாவை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு எந்த தகுதியும் இல்லை. புதுச்சேரி வளர்ச்சிக்காக போராட்டம் நடத்துகிறேன் என்று சொல்லும் நாராயணசாமிதான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிகம் முட்டுக்கட்டைகளை போட்டவர். அவரது செயல்பாடுகளின் மீது திருப்தி இல்லாததால்தான் இப்போதுள்ள அவரது எம்.எல்.ஏ.க்களே அவருக்கு எதிராக உள்ளனர். டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வெறும் கண் துடைப்பு நாடகம்.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள முழுஅடைப்பு போராட்டம் தேவையற்றது. இந்த போராட்டத்துக்கு ஆளுங்கட்சி மறைமுக ஆதரவு அளித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த 4½ ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை, உணவுப்பொருட்களின் விலை அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சுயநலத்தோடு நடத்தப்படும் முழுஅடைப்பினை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story