கடலூர் கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை


கடலூர் கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை
x
தினத்தந்தி 5 Jan 2019 4:15 AM IST (Updated: 5 Jan 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

மணல் குவாரி திறக்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அடுத்த வாரம் மணல் குவாரி திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி மொழி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி திறக்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்போவதாக மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்றாலும் தடையை மீறி போராட்டம் நடத்தப்போவதாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக புதிய கலெக்டர் அலுவலக சாலையின் இருபுறங்களிலும் நேற்று காலையில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் புதிய கலெக்டர் அலுவலக சாலையின் இருபுறங்களில் இருந்தும் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மணல் குவாரி திறக்க வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். இப்போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. சங்கத்தின் மாநில உதவி பொதுச்செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், தலைவர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் கடலூர் தாசில்தார் சத்யன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அசோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தொழிலாளர்கள் தரப்பில், மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி திறக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. நிர்வாகிகளும், மாட்டு வண்டி தொழிற்சங்கத்தினரும் வலியுறுத்தினார்கள்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அடுத்தவாரம் திருக்கண்டேஸ்வரம், டி.இளமங்கலம், மணவாளநல்லூர், குஞ்சமேடு ஆகிய 4 இடங்களில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி திறக்கப்படும். ஆயிப்பேட்டையில் சாலை வசதி ஏற்பாடு செய்த பின் மணல் குவாரி திறக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Next Story