பத்லாப்பூரில் ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து பயங்கர தீ புகையால் சுற்றுப்புற மக்கள் பாதிப்பு
பத்லாப்பூர் எம்.ஐ.டி.சி.யில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அம்பர்நாத்,
பத்லாப்பூர் எம்.ஐ.டி.சி.யில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெளியேறிய புகையால் சுற்றுப்புற மக்கள் பாதிப்படைந்தனர்.
பயங்கர வெடிச்சத்தம்
தானே மாவட்டம் பத்லாப்பூர் எம்.ஐ.டி.சி. பகுதியில் பிளாட்டினம் பாலிமர் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இந்த தொழிற்சாலைக்கு விடுமுறை ஆகும். அதன்படி நேற்று விடுமுறை என்பதால் தொழிற்சாலை மூடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், தொழிற்சாலையில் நேற்று காலை 10.20 மணி அளவில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளில் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.
தீயை அணைக்க போராட்டம்
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். 10 வாகனங்களில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் தீ தொழிற்சாலை முழுவதும் பரவி எரிந்தது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
தீயணைப்பு படையினர் நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். ஆனால் தீ கட்டுங்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்தது.
கொதிகலன் வெடித்து...
சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து பத்லாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தொழிற்சாலையில் உள்ள ஒரு ரசாயன கொதிகலன் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையே தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கரும்புகையால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட னர்.
தீயணைப்பு பணியின் போது, அங்குள்ள சாலையிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story