விருதுநகர்– சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை
விருதுநகர்–சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான திட்டப்பணி நிலம் கண்டறியப்பட்டதோடு முடங்கி உள்ள நிலையில் இத்திட்டப்பணியை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
கடந்த 2008–ம் ஆண்டு விருதுநகர்–சாத்தூர் இடையே 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என அப்போது இருந்த மத்திய, மாநில அரசுகள் அறிவித்து நிலம் கண்டறியும் பணி நடைபெற்றது. ஆனால் இந்த திட்டப்பணி இடையில் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016–ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் தொழில் முதலீட்டு மையம் தொடங்க மத்திய அரசு முன்வந்த போது மாநில அரசு பரிந்துரை செய்யாததால் அந்த திட்டமும் செயலாக்கம் பெறவில்லை.
இதனையடுத்து தென் மாவட்டங்களை தொழில் மயமாக்கும் திட்டத்தினை அறிவித்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா விருதுநகர்–சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாநில தொழில்துறை சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான உத்தரவினை பிறப்பித்தது. விருதுநகர்–சாத்தூர் இடையே இதற்காக 2500 ஏக்கர் நிலம் கண்டறியும் பணியினை மேற்கொள்வதற்காக சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு அவரது கட்டுப்பாட்டில் வருவாய்த்துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே சிப்காட் தொழிற்பேட்டைக்கான நிலம் கண்டறியும் பணி முடிவடைந்து தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால் நிலம் கையகப்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் அந்த பணியும் முடக்கம் அடைந்தது. இந்த பணியை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணியில் தொடர்ந்து இருந்து வந்தாலும் தொழிற்பேட்டை அமைக்கும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஏற்கனவே இந்த மாவட்டத்தில் பொருளாதார மண்டலம், தொழில்மையம் அமைக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த மாவட்ட மக்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் அந்த திட்டங்கள் கைவிடப்பட்டுவிட்டதால் ஏமாற்றம் அடைந்துவிட்ட நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டமாவது செயல்பாட்டுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
எனவே தமிழக அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டப்பணியை முடுக்கிவிட, வரும் நிதிநிலை அறிக்கையிலாவது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டப்பணியினை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.