அரசு அனுமதித்த இடத்தில் தான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்; கலெக்டர் தகவல்


அரசு அனுமதித்த இடத்தில் தான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Jan 2019 11:15 PM GMT (Updated: 4 Jan 2019 11:07 PM GMT)

அரசு அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் தான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 2019–ம் ஆண்டு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில் கலெக்டர் பேசியதாவது:– ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் அரசு அனுமதி பெற்று, அதன் விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும்.

மேலும் அரசு அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் தான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் கட்டுமாடுகளை அவிழ்த்துவிட அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு யாரேனும் கட்டுமாடுகளை அவிழ்த்து விட்டால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதுமட்டுமின்றி கட்டுமாடு அவிழ்த்து விட்டு அதன் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டால் மாட்டின் உரிமையாளர்கள் மட்டுமின்றி விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே ஒருங்கிணைப்பாளர்கள், குழு அமைத்து முழுமையாக கண்காணிக்க வேண்டும். அதேபோல அரசு அலுவலர்களும் கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை பதிவு செய்திட வேண்டும். காளைகள் நன்கு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தகுதி உடைய காளைகளை மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும் காளைகளுக்கு ஊக்க மருந்துகளை வழங்கப்பட்டது கண்டறியப்பட்டால் அனுமதிக்கப்படமாட்டாது. அதேபோல் மாடுபிடி வீரர்கள் முழு பரிசோதனைக்கு பின்பு தான் அனுமதிக்கப்படுவர்கள்.

நிகழ்ச்சி மைதானத்தில் மருத்துவக்குழு முகாம் அமைத்து கண்காணிப்பதுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மைதானமோ அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையார்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவக்குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவக்குழுவுடன் வருவாய் மற்றும் காவல்துறையினர் ஒருங்கிணைந்து சுற்றுவட்டார பகுதிகளை கண்காணிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை மூலம் ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளை போதிய அளவு அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை மூலம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை கள ஆய்வு மேற்கொண்டு உறுதி தன்மைச் சான்று வழங்கிய பின்பு தான் அனுமதி வழங்கப்படும். எனவே பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து பணிகளையும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்கு வருபவர்களின் இருசக்கரம் மற்றும் நான்குசக்கர வாகனங்களை காவல் துறை அனுமதி பெற்ற இடங்களில் தான் நிறுத்தி வைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் துணை கலெக்டர் ஆஷாஅஜித், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேல் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story