வேலைவாய்ப்பு முகாமில் 359 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் ராமன் வழங்கினார்


வேலைவாய்ப்பு முகாமில் 359 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் ராமன் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jan 2019 11:00 PM GMT (Updated: 5 Jan 2019 9:56 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 359 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ராமன் வழங்கினார்.

வேலூர், 

வேலூர் ஊரீசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. முகாமை கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி வைத்து, தொடங்கி வைத்தார். முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகள் 1,065 பேர் தேர்வு செய்யப்பட்டு, 359 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ராமன் வழங்கினார். 32 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது

அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருவள்ளூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும், வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டருக்கு அளிக்கப்படும் தன்விருப்ப நிதியினை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் பெறுவதற்காக பயன்படுத்தி வருகிறோம். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலை வாய்ப்பு வழங்கக்கோரி அதிகளவில் மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மென்மேலும் முன்னேறி வெற்றிகளை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து ‘பைக் டாக்ஸி’ திட்டத்தில் முன்பதிவு செய்து மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்திட ‘மா உலா’ என்ற செல்போன் செயலியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். இத்திட்டம் வேலூர் மாநகரில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனர் பாஷித், தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story