அ.ம.மு.க. வெற்றி பெறும் என்பதால் திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு அ.தி.மு.க.–தி.மு.க. பயப்படுகிறது டி.டி.வி.தினகரன் பேட்டி


அ.ம.மு.க. வெற்றி பெறும் என்பதால் திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு அ.தி.மு.க.–தி.மு.க. பயப்படுகிறது டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2019 11:15 PM GMT (Updated: 5 Jan 2019 5:42 PM GMT)

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றிபெறும் என்பதால் திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பயப்படுகிறது என்று தஞ்சையில், டி.டி.வி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சை தொம்பன்குடிசையில் கொடியேற்று விழா நடந்தது. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. க்டசி கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–


திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு ஆளுங்கட்சி பயப்படுவது போல், திமுகவும் பயப்படுகிறது. மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, தொல்.திருமாவளவன் பேசுவதை பார்த்தால் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் பயப்படுகிறது என்பது தெரிகிறது. ஆனால் திருவாரூரில் தேர்தல் நடைபெறும். இதில் நாங்கள் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

கருணாநிதி செயலற்று இருந்த அந்த நேரத்தில் ஆர்.கே நகர் தெர்குதியில் இடைத்தேர்தல் வந்தது. கடந்த 20 வருடங்களில் சுயேச்சை வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தான் பணம் கொடுத்தார்கள். தி.மு.க. பணம் கொடுக்கவில்லை.


திருவாரூர் தொகுதியில் இதுபோன்று செய்தால், அங்குள்ள 303 வாக்கு சாவடிகளிலும் ஆட்கள் போட்டு புதிய முறையை கையாளப்போகிறோம். யாராவது பணம் கொடுத்தால் அவர்களும், அதை தடுக்காத அதிகாரிகளும் மாட்டிக் கொள்வார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சியை நம்பாமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நம்பிதான் அங்குள்ள மக்கள் ஓட்டு போட்டார்கள்.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது மீத்தேன் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கவில்லை. இப்போது ஜெயலலிதா இல்லாததால் 8 வழிச்சாலை மற்றும் மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆகையால் ஜெயலலிதா போன்ற தைரியமான தலைமை வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு அடித்தளம் இல்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பு உண்டு. அதனால் மக்கள் விரும்பாத திட்டங்களை அங்கு அவர்கள் கொண்டுவர முடியவில்லை. அதனால் தான் தமிழகத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டு வருகிறார்கள். குறிப்பாக காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையை கண்டு கொள்வதில்லை.

திருவாரூரில் ஆளும்கட்சி சர்வே செய்ததில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் வெற்றி பெறும் என்று தெரிந்து கொண்டது. இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வேண்டாம் என்று எதிர்க்கிறார்கள். ஆனால் மக்கள் எதிர்க்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக சில மாநில கட்சிகளுடன் பேசி வருகிறோம். திருவாரூர் தொகுதியில் கஜா புயலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இது போன்ற சமயத்தில் நிவாரண பொருட்கள் கொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை அவர்களுக்கு நிவாரண பொருட்கள் சென்றடைய வேண்டும். அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story