மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
மரவள்ளி கிழங்கிற்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாகம்பாளையம், பரமத்தி, கூடச்சேரி, வசந்தபுரம், பாண்டமங்கலம், மோகனூர், மணப்பள்ளி, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கை பயிர் செய்துள்ளனர்.
இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் ராசிபுரம், பேட்டை, செல்லப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ராசிபுரம், பேட்டை, செல்லப்பம்பட்டியில் செயல்படும் சேகோ ஆலைகள் வாரத்தில் தலா 2 நாட்கள் விடுமுறை விடப்படுவதால் மரவள்ளி கிழங்கு அதிக அளவில் தேக்கமடைந்து விலை சரிவை சந்தித்தும், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாகவும், ஆலைகளுக்கு ஆதரவாக இடைத்தரகர்களும் செயல்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு அதிக அளவில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்யப்பட்டு வந்த நிலையில் டன் ஒன்று ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால் தற்போது குறைந்த அளவே மரவள்ளி கிழங்கு பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில் டன் ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
எனவே தமிழக அரசு மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகளின் நலன் கருதி மரவள்ளி கிழங்கிற்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசே சேகோ ஆலைகளை நிறுவி மரவள்ளி கிழங்கு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story