திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவித்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது சேலத்தில் முத்தரசன் குற்றச்சாட்டு
திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவித்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டி உள்ளார்.
சேலம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பேச்சு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. கஜா புயலால் 4 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடிக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடிக்கும் விடை கொடுக்க வேண்டிய ஆண்டாகும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், வாக்காளர் அடையாள அட்டை உள்பட அனைத்து பொருட்களையும் தொலைத்து விட்டு தவித்து வருகின்றனர். இன்னும் பாதிப்பு கணக்கீடு செய்யும் பணிகளே முடியாத நிலையில், மற்ற தொகுதிகளை விட்டு விட்டு திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவித்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது. ஒரு வேளை தேர்தல் நடந்தால் தி.மு.க. வேட்பாளர் எளிதாக வெற்றி பெறுவார். தி.மு.க.வை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் தொகையை இழப்பார்கள்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியபடி கல்வி கடன், விவசாய கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். உயர் மின்கோபுரம் அமைப்பதால் 13 மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தை அரசு அனுமதிக்க கூடாது.
பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அரசு அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்திட கோரி பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் என்பது சந்தேகத்திற்கு உரியது. சபரிமலையில் பெண்கள் அய்யப்பனை தரிசித்த விவகாரத்தில் கேரளாவில் கொள்கையில் பலம் இல்லாதவர்கள் தான் வன் முறையில் ஈடுபடுவார்கள். அதை தான் பா.ஜனதா செய்கிறது.
கோர்ட்டு உத்தரவை மீறி, சேலம் அருகே ஏரியை மூடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தமிழக முதல்-அமைச்சரே அடிக்கல் நாட்டி, பணிகள் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது. இந்த பணிகளை நிறுத்தாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு வருகிற 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள், மாநில தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story