ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி தர்மபுரி எஸ்.வி. ரோடு அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை முதல் மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
தர்மபுரி ஹரிகரநாதசாமி கோவில் தெருவில் உள்ள தாசஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் ஸ்ரீவீரதீர ஆஞ்சநேய சாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இண்டூரை அடுத்த குப்புசெட்டிப்பட்டியில் அமைந்துள்ள 32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தொப்பூர் கணவாயில் உள்ள மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது.
இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், வரதகுப்பம் வெங்கட்ரமண சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில், பாப்பாரப்பட்டி அருகே உள்ள சஞ்சீவராயன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பென்னாகரம் பிராமணர் தெரு சிவன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அனுமன் சிலைக்கு அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையொட்டி சாமிக்கு ராமஜெய அலங்காரம், வெற்றிலை சிறப்பு புஷ்ப அலங்காரம், 1,008 சகஸ்ரநாம அர்ச்சனை, மஹா தீபாராதனை நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி ஏரிக்கரையில் உள்ள ஆஞ்சநேய சாமி கோவில், கடைவீதி ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிகளுக்கு அபிஷேகம், வெண்ணை காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
அரூர் வர்ணதீர்த்தம் பகுதியில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, அலங்காரம் செய்யப்பட்டு வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது.
அனுமன் ஜெயந்தி விழாவை யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் பிரசித்தி பெற்ற காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஹோமங்கள் நடந்தது.
இதையொட்டி ஆஞ்சநேயருக்கு மலர் மற்றும் அருகம்புல்லால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாம பூஜைகள், மகா சுதர்சன மூல மந்திர ஹோமம், மகா கும்பாராதனை, மகா மங்களாரத்தி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் பிரகார உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பர்கூர் அடுத்த சின்னகாரகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ ஜெய்வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகம், வெண்ணை காப்பு, சிறப்பு அலங்காரம், அனுமன் ஹோமம், சீதாராமர் ஹோமம், விஷ்ணு சகஸ்ர நாம ஹோமம், மகா பூர்ணாஹதி சாந்தி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து பால் குடம், சீர்வரிசை கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிற்பகல் சீதா, லட்சுமணன், அனுமன், கோதண்டராமர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருக்கல்யாணம், திருமேல் விளக்கு ஏற்றுதல் பூஜை நடந்தது. அப்போது குருசாமி ரமேஷ்சந்திரன், நேர்த்திக்கடன் செலுத்த கோவிலை சுற்றி படுத்திருந்த பக்தர்கள் மீது பால் குடத்துடன் நடந்து சென்றார். மாலை சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர், கோதண்டராமர் சாமிகள் உற்சவம் வாணவேடிக்கையுடன் நடந்தது.
ஓசூரில் பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள பண்ட ஆஞ்சநேய சாமி கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் ஆஞ்சநேயர் வெண்ணெய் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஓசூர்-தளி சாலையில் டி.வி.எஸ்.நகர் அருகே உள்ள அம்பாள் நகர் ஸ்ரீ பக்த அனுமார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அனுமாருக்கு 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதேபோல், ஓசூர் ஏரித்தெரு, பாகலூர் ரோடு சர்க்கிள், தாலுகா அலுவலக சாலை, ராம்நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அனுமார் கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கல்லாவி அருகே உள்ள அனுமன்தீர்த்தத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல சூளகிரி கீழ்த்தெருவில் உள்ள ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேய சாமி கோவில், உத்தனப்பள்ளி அருகே கூகனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அனுமந்தராய சாமி கோவில், பாத்தகோட்டா, கோபசந்திரம், அத்திமுகம், பேரிகை மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story