போலீசார் கெடுபிடியால் ஊட்டியில் தனியார் மினி பஸ்கள் நிறுத்தம் போக்குவரத்து பாதிப்பு
போலீசார் கெடுபிடியால் ஊட்டியில் தனியார் மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் செல்ல முடியாத இடங்களுக்கு, 8 கிலோ மீட்டர் தூரம் தனியார் மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி-தலைகுந்தா வழித்தடத்தில் 19 மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த வழித்தடத்தில் 17 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2-ந் தேதி முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மினி பஸ்கள் மீது 50-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
போலீசாரின் இந்த கெடுபிடியால் மினி பஸ்களை இயக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைத்து மினி பஸ்களையும் ஒரே நேரத்தில் நேற்று மதியம் திடீரென ஊட்டி மார்க்கெட் டவுன் பஸ் நிலையத்தில் நிறுத்தினர். இதனால் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை லோயர் பஜார் சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக ஊட்டி-காந்தல் இடையே அரசு பஸ்கள் இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
தலைகுந்தா, அழகர்மலை, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் நஞ்சுண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மினி பஸ்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர், கண்டக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதனை தொடர்ந்து மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போலீசாரிடம் கூறும்போது, கடந்த சில நாட்களாக மினி பஸ் டிரைவர்கள் மீது அதிவேகமாக செல்வது, பேட்ஜ் அணியாமல் இருப்பது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது, அதிக ஆட்களை ஏற்றுவது, சீருடை அணியாமல் இருப்பது போன்ற பல்வேறு வழக்குகள் பிங்கர்போஸ்ட் பகுதி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, சேரிங்கிராஸ் ஆகிய பகுதிகளில் வைத்து தொடர்ந்து பதிவு செய்யப்பட்டன.
எங்களிடம் அனைத்து சான்றிதழ்கள் இருந்தாலும், வேண்டும் என்றே அதிவேகமாக வந்ததாகவும், அதிக ஆட்களை ஏற்றி செல்வதாகவும் கூறி வழக்குப்பதிவு செய்தனர். எங்களுக்கு தினமும் ரூ.300 முதல் ரூ.350 தான் சம்பளம் கிடைக்கிறது. வழக்குகளுக்கு எங்களால் அபராதம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மினி பஸ் உரிமையாளர்கள் இதனை கண்டுகொள்வது இல்லை. எனவே நாங்கள் மினி பஸ்களை இயக்கமாட்டோம் என்றனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் கூறும்போது, ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு வெளியூர் சென்று உள்ளதால், நாளை (இன்று) அல்லது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வந்து விடுவார். அவருடன் மினி பஸ் உரிமையாளர்கள், டிரைவர் சங்கத்தினர் பேசி முடிவு எடுக்கலாம். அதுவரை பஸ்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று மாலை 5 மணி முதல் தனியார் மினி பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அரசு போக்குவரத்துக் கழகம் ஊட்டி-தலைகுந்தா வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து அரசு பஸ்களை நிறுத்தி விட்டு, தற்போது ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்குகிறது. அதேபோல் காந்தல் பகுதிக்கு இயக்கப்பட்ட 4 பஸ்களில், ஒரு அரசு பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு பஸ்களை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், ஊட்டி நகரில் போக்குவரத்து போலீசாரின் கெடுபிடி, பொதுமக்களிடம் கடுமையாக பேசி நடந்து கொள்வதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story