தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க கூடாது; ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க கூடாது; ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 6 Jan 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

சிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடந்தது. மாநிலத் துணை தலைவர் ஜோசப்ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் ஆரோக்கியராஜ், ஞான அற்புதராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் தனித்துறையில் செயல்பட்டு வந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கல்வித்துறையின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்தநிலை தொடர்ந்தால் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள அனைத்து ஆசிரியர் இயக்கங்களையும் திரட்டி பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்.

மத்திய மாநில அரசுகளின் செயல்பாட்டை கண்டித்து நாளை மறுநாள் மற்றும் 9–ந்தேதியன்று மத்திய தொழிற் சங்க சம்மேளனங்கள் மேற்கொள்ள இருக்கம் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் பங்கேற்பது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட அரசாணை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் துறை ரீதியான நடவடிக்கையை கல்வித்துறை கைவிட வலியுறுத்துவது

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அடுத்த மாதம் 19–ந்தேதி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் புது டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி நடைபெற உள்ள பேரணியில் சிவகங்கையில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்பது. 3–ம் பருவம் தொடங்கிவிட்ட நிலையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா நோட்டு புத்தகங்களை விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story