கூடலூர் வழியாக கேரளாவுக்கு இயக்கப்பட்ட 3 அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம் பொதுமக்கள் அவதி
கூடலூர் வழியாக கேரளாவுக்கு இயக்கப்பட்ட 3 அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கேரளா-கர்நாடகா மாநிலங்களின் கரையோரம் 2 தாலுக்காக்களை உள்ளடக்கிய கூடலூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இங்கு சுமார் 2½ லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தொகுதியின் தலைமையிடமாக கூடலூர் திகழ்கிறது. ஆர்.டி.ஓ., வன அலுவலர், ஊராட்சி ஒன்றியம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர், தேயிலை மற்றும் காபி வாரியங்கள், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தின் கீழ் சுமார் 48 பஸ்கள் கூடலூர் பகுதியில் இயக்கப்படுகிறது. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கேரளா உள்ளிட்ட பெருநகரங்களுக்கும், கூடலூர் சுற்றுவட்டார பகுதிக்கும் இயக்கப்படுகிறது. இருப்பினும் கூடலூர் பகுதியில் பஸ் வசதி இல்லாத கிராமங்கள் பெரும்பான்மையாக உள்ளது. மேலும் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி மேல்கூடலூரில் இயங்கி வருகிறது. அவசர காலங்களில் ஊட்டி தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர்.
போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகள் சரிவர கிடைக்காததால் கூடலூர் தொகுதி மக்கள் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் கேரளா- கர்நாடகாவில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் நீலகிரிக்கு இயக்கப்படுகிறது. கூடலூரில் இருந்து ஊட்டி அல்லது கோவைக்கு பல மணி நேரம் பயணம் செய்ய முடியாததால் அண்டை மாநிலங்களுக்கு கூடலூர் பகுதி மக்கள் சென்று திரும்புகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு ஊட்டியில் இருந்து தினமும் காலை 6½ மணிக்கு கூடலூர் வழியாக கோழிக்கோடுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதேபோல் கூடலூர் கிளை அலுவலகத்தில் இருந்து பந்தலூர், சேரம்பாடி வழியாக சுல்தான்பத்தேரிக்கும், மற்றொரு பஸ் வைத்திரிக்கும் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 3 அரசு பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால் மருத்துவ சிகிச்சை மற்றும் பல்வேறு பணிகளுக்காக கேரளாவுக்கு சென்று வருகிற கூடலூர் பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் விளக்கம் கேட்ட போது, போதிய வருவாய் வராததால் 3 பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படு கிறது.
எனவே வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என கூடலூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் அரசு பஸ்களை பயன்படுத்தி வரும் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர்.
இது குறித்து நெலாக்கோட்டை ஊராட்சி மேபீல்டு பகுதியை சேர்ந்த மோகன் கூறியதாவது:-
ஊட்டி- கோழிக்கோடு, கூடலூர்- சுல்தான்பத்தேரி, வைத்திரி என 3 அரசு பஸ்களை தோட்ட தொழிலாளர்கள், சாதாரண ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்தனர். கூடலூர் பகுதியில் போதிய மருத்துவ வசதி கிடைக்காததால் தினமும் ஏராளமான மக்கள் கேரளாவுக்கு சென்று திரும்புகின்றனர். இதேபோல் கூடலூரில் இருந்து மேபீல்டுக்கு மாலை 6.20 மணிக்க இயக்கப்பட்ட அரசு பஸ்சும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களுக்கு மாற்றாக வேறு பஸ்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அதை பின்பற்றுவது இல்லை. பஸ்கள் பழுதடைந்தால் உடனடியாக மாற்று பஸ்கள் மூலம் இயக்க வேண்டும். ஆனால் பஸ் பழுதடைந்து விட்டதால் அதை சீரமைக்கும் வரை அந்த வழித்தடத்தில் வேறு பஸ் இயக்குவது இல்லை. இதனால் அரசு பஸ்கள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர்.
கூடலூர் பகுதிமக்கள் தினமும் மேப்பாடி, கோழிக்கோடு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வருகின்றனர். போதிய வருவாய் வராமல் போவதற்கு உரிய நேரத்தில் அரசு பஸ்களை இயக்காதது ஒரு காரணம். கேரள- கர்நாடக அரசு பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் அண்டை மாநில போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கிறது. தோட்ட, கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு குழு பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:-
அரசு பஸ்களில் போதிய வருவாய் கிடைப்பது இல்லை என அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதற்கு மக்கள் காரணம் இல்லை. உரிய நேரத்தில் முறையாக பஸ்களை இயக்கினால் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். உடைந்த பழுதடைந்த பஸ்களில் அரசு நிர்ணயித்துள்ள தொகையை செலுத்தி மக்கள் பயணம் செய்கின்றனர். பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தி உள்ளதால் போக்குவரத்து கழகத்துக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் தரமாக உள்ளதா? என ஆராய வேண்டும். பராமரிப்பின்றி இயக்கப்படும் பஸ்கள் நடுவழியில் பழுதடைந்து பயணிகளை சிரமப்படுத்தி வருகின்றது. கோழிக்கோடு, வைத்திரி, சுல்தான்பத்தேரி வழித்தடங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ்களை ரத்து செய்துள்ளதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் மீண்டும் அந்த பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story