சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 11 கொலை, 2 கற்பழிப்பு உள்பட 3653 குற்ற வழக்குகள் பதிவு


சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 11 கொலை, 2 கற்பழிப்பு உள்பட 3653 குற்ற வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 5 Jan 2019 11:15 PM GMT (Updated: 5 Jan 2019 8:03 PM GMT)

சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள 6 போலீஸ் நிலையங்களில் கடந்த ஆண்டு மட்டும் 3653 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 11 கொலை சம்பவமும், 2 கற்பழிப்பு வழக்கும் உள்ளது.

சிவகாசி,

சிவகாசி உட்கோட்டத்தில் சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், மாரனேரி, எம்.புதுப்பட்டி. அனைத்து மகளிர் காவல் நிலையம் என 6 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் 920 வழக்குகளும், சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் 1318 வழக்குகளும், திருத்தங்கல் காவல் நிலையத்தில் 914 வழக்குகளும், மாரனேரியில் 240 வழக்குகளும், எம்.புதுப்பட்டியில் 249 வழக்குகளும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 வழக்குகள் என மொத்தம் 3653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 11 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதே போல் 11 கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெற்றது. இதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 7 வழிபறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 16 இடங்களில் வீடு புகுந்து திருட்டு சம்பவம் நடைபெற்றது. மேலும் 22 திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 51 பேர் காணாமல் போனார்கள். அவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் 40 பேர் திரும்பி வந்தனர். இதுவரை திரும்பி வராமல் உள்ள 11 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். வாகனங்கள் அதிகம் கொண்ட சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 108 சாலை விபத்துக்கள் நடைபெற்றது. இதில் 27 பேர் பரிதாபமாக இறந்தனர். 108 பேர் படுகாயம் அடைந்தனர். போக்குவரத்து விதிகள் மீறியதாக 67,007 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story